வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2015 (20:00 IST)

பென்சில் திருடியதாக 3 ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற தலைமை ஆசிரியர்

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 10 வயது மாணவர் பென்சில் திருடியதாக கொடூரமான முறையில் தலைமை ஆசிரியர் அடித்திருக்கிறார். இதில் அந்த மாணவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறினர்.
 
இதுகுறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அப்துல் ஹமீது வியாழக்கிழமை கூறியதாவது:
 
பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சௌத்ரி தவரிகா பிரசாத் அகாதெமி என்று ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சிவா ராவத் (10) என்ற மாணவர் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். செவ்வாய்க்கிழமை (ஏப்.7) சிவாவின் வகுப்பறையில் இருந்த சக மாணவருடைய பென்சில் திருடப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், வகுப்பில் இருந்த ஆசிரியர், அனைத்து மாணவர்களின் பைகளையும் சோதனை செய்திருக்கிறார். இறுதியில் அந்த பென்சில் சிவாவின் பையில் இருந்துள்ளது. இதை தலைமை ஆசிரியரிடம் அந்த ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.
 
வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவரை இரக்கமற்ற முறையில் அடித்திருக்கிறார். வீட்டுக்கு சென்ற அந்த மாணவர் வயிற்றில் வலி ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். பின்னர் தன்னை தலைமை ஆசிரியர் வயிற்றில் அடித்ததாக பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவா புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்தத் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். எனினும், அந்த மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, இறந்ததற்கான காரணம் தெரிந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்துல் ஹமீது தெரிவித்தார்.