1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:11 IST)

நகராட்சி அமைப்புகளுக்குப் போதிய அதிகாரம் இல்லை - வெங்கையா நாயுடு

நகராட்சி அமைப்புகளிடம் போதிய அதிகாரம் இல்லை. அரசியல் அமைப்பின் சட்டம் 1992 (74ஆவது திருத்தச் சட்டத்தின்படி) பொரும்பாலான மாநில அரசுகள் அவற்றிற்குத் தேவையான பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்கவில்லை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் எம். வெங்கையா நாயுடு மாநிலங்கள் அவையில் 2014 ஜூலை 31 அன்று தெரிவித்துள்ளார்.
 
அரசியல் அமைப்பு சட்டம் 74ஆவது திருத்தச் சட்டத்தின்படி நாட்டில் பெரும்பாலான நகராட்சி அமைப்புகள் நிதிப் பற்றாக்குறையாலும் தங்களது அலுவல்களை அவ்வப்போது செயல்படுத்த இயலாத நிலையிலும் உள்ளன. 
 
மாநிலங்கள் அவையில் ராஜீவ் சந்திரசேகர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த போது இவ்வாறு தெரிவித்தார். உள்ளாட்சி முறையைச் சிறப்பாகச் செயல்படுத்துபவர்கள், அதன் செயல்பாடு, நிதி ஆகியவற்றை வழங்க நகராட்சிகளுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று 74ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தெரிவிக்கிறது. 
 
இதன்படி 29 மாநிலங்களில் 10 மாநிலங்கள் மட்டுமே அதிகாரங்களை நகராட்சி அமைப்புளுக்கு வழங்கியுள்ளன. சட்டீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்களது அதிகாரங்களை நகராட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ளன. 
 
மேலும், தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்கள் அரசியல் அமைப்பு சட்டம் 243இன் கீழ் பெருநகரத் திட்டக் குழுக்களை அமைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு உட்பட கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் 6 மாநிலங்கள் மட்டுமே பெரு நகர திட்டக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளன. இன்னும் ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் புதிதாக துவங்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் ஆகியவை திட்டக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். 
 
இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.