செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 7 ஜூன் 2015 (11:36 IST)

’வேலைவாய்ப்பு கிடைக்காது; துடைப்பத்தை எடுங்கள் என்கிறார் மோடி’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பு எதுவும் கிடையாது. அதனால் துடைப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள், தெருக்களை சுத்தம் செய்யுங்கள் என்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் ஓராண்டிற்கு முன்னர் புதிய அரசு வந்தது. அந்த அரசும் மம்தா பானர்ஜியை போலவே ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி, என்று இருவரும் பல விஷயங்கள் பற்றி பேசினார்கள்.
 
இப்போது மோடி அரசு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. நானும் எந்த கூட்டத்துக்கு சென்றாலும், அங்குள்ள மக்களிடம் இந்த ஒரு வருடத்தில் உங்களில் யாருக்காவது வேலை கிடைத்துள்ளதா? என்று கேட்டிருக்கிறேன். ஆனால், ஒருவரும் எனக்கு வேலை கிடைத்துள்ளது என்று கையை உயர்த்துவது இல்லை.          
 
பிரதமர் மோடி முதலில் தூய்மை பற்றி பேசினார். உங்களுக்கு வேலை எதுவும் கிடைக்காது, எனவே ஒரு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், தெருக்களை சுத்தம் செய்யுங்கள் என்றார். அந்த தூய்மை திட்டம் பற்றிய பேச்சு முடிந்துவிட்டது. இப்போது அவர் மக்களை பார்த்து யோகா செய்யுங்கள் என்று சொல்கிறார்.
 
வேலைவாய்ப்பு பற்றி அவர் எதுவும் பேசுவது இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் புதிதாக ஏதோ சிலவற்றை சொல்கிறார். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மறைக்கவே அவர் இவ்வாறு புதிய விஷயங்களை கூறி வருகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.