வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 25 ஜனவரி 2015 (19:28 IST)

தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய அணுகுமுறை: ஒபாமாவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி உறுதி

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இன்று கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-
 
அமெரிக்க அதிபரின் இந்த இரண்டாவது இந்தியப் பயணமானது நமது உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை உணர்த்துகின்றது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பானது, இயற்கையாகவே அமைந்த உலகளாவிய நட்பாகும்.
 
அணு ஒப்பந்தத்தில் வணிகரீதியான ஒத்துழைப்பை நோக்கி நாங்கள் முன்னோக்கி செல்கிறோம். நிலையான நடவடிக்கைகளின் மூலம் உறுதியான சாதனைகளை எதிர்நோக்குகிறோம்.
 
பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்காக, பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டுறவு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முடிவெடுத்துள்ளோம்.
 
தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரு புதிய அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் பாதுகாப்பான பதுங்குமிடங்களை ஒழிக்க அனைத்து நாடுகளும் தங்களது பங்கை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கேற்ப, எனக்கும் ஒபாமாவுக்கும் இடையில் நேரடி ‘ஹாட்லைன்’ வசதியை ஏற்படுத்தவும், இதேபோல் இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கிடையிலும் நேரடி ‘ஹாட்லைன்’ வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மோடி கூறினார்.