1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 20 மே 2014 (10:42 IST)

புதிய மத்திய அமைச்சர்கள் தேர்வு பற்றி மோடி தீவிர ஆலோசனை

நரேந்திர மோடி இன்று பிரதமராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். புதிய மத்திய அமைச்சர்களை தேர்வு செய்வது பற்றி அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். அத்வானிக்கு சபாநாயகர் பதவியும், ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமர் ஆகிறார். டெல்லியில் இன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின் கூட்டம் நடக்கிறது. அதில் மோடி, நாடாளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 
பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும், மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிறகு நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்கள். அப்போது, தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை தெரிவித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு நரேந்திர மோடி கேட்டுக்கொள்கிறார்.
 
நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த வாரமே அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. அவர் மட்டும் பதவி ஏற்பாரா? அல்லது அவருடன் ஒரு சில அமைச்சரவை பிரமுகர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்களா என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையே, தனது அரசில் யார், யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பது என்பது குறித்து நரேந்திர மோடி நேற்று இரண்டாவது நாளாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அவர் டெல்லியில் குஜராத் பவனில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
நேற்றுமுன்தினம் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அத்வானி, துணை பிரதமராக இருந்தவர். அவரது மரியாதைக்குரிய பதவியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மோடி இருக்கிறார். அத்வானி, சபாநாயகர் பதவியை விரும்புவதாக தெரிகிறது. அதனால், அவருக்கு அப்பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது. முரளி மனோகர் ஜோஷியை பொறுத்தவரை, அவருக்கு முக்கியமான இலாகா அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தை விரும்புகிறார். அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் பதவியை விரும்புகிறார். அது முடியாத பட்சத்தில், ராணுவ அமைச்சர் பதவியை விரும்புகிறார். அவர் மோடிக்கு அடுத்தபடியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், அவர் கட்சித் தலைவர் பதவியிலும் நீடிப்பார் என்று தெரிகிறது.
 
ராஜ்நாத் சிங்தான் கடும் எதிர்ப்புக்கு இடையே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர். எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்த மோடி விரும்புவதாக தெரிகிறது. மூன்றாம் இடம், நிதின் கட்காரிக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர்களுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் அருண் ஜெட்லிக்கு மட்டும் விலக்கு அளிக்க நரேந்திர மோடி விரும்புகிறார். இந்த தேர்தலில் அருண் ஜெட்லி தோல்வி அடைந்துவிட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருப்பதால், அவர் அமைச்சர் ஆவதற்கு தடை ஏதும் இல்லை என்று பாஜக வட்டாரங்கள் கருதுகின்றன.
 
அருண் ஜெட்லி, ஏற்கனவே வாஜ்பாய் அரசில் வர்த்தக அமைச்சராக இருந்தவர். அவரது திறமை மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பை அளிக்க மோடி விரும்புவதாக தெரிகிறது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ், மோடியின் எதிர் முகாமைச் சேர்ந்தவராக கருதப்படுபவர். மோடி அரசில் இடம் பெற விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரிடம் அவர் கூறியிருந்தார்.
 
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மோடி அமைச்சரவையில், முக்கியமான முதல் 4 இலாகாக்களில் ஒன்றைப் பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கு வெளியுறவு இலாகா அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மோடிக்கு நெருக்கமானவரான அமித் ஷா, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
 
பாஜக கட்சி விவகாரங்களில் இருந்து நீண்ட காலமாக ஒதுங்கி இருந்த அருண் ஷோரியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள மோடி திட்டமிட்டுள்ளார். கட்சியின் முஸ்லிம் பிரமுகரான ஷாநவாஸ் உசேன், அமைச்சர் ஆவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் தோற்றுவிட்டதால், அந்த வாய்ப்பு, மற்றொரு முஸ்லிம் பிரமுகரான முக்தார் அப்பாஸ் நக்விக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
 
இதுதவிர, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், எஸ்.எஸ்.அலுவாலியா, மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி, பூனம் மகாஜன், கிரித் சோமையா, கல்ராஜ் மிஸ்ரா, அனந்த குமார், எடியூரப்பா, சுமித்ரா மகாஜன், ராஜீவ் பிரதாப் ரூடி, வி.கே.சிங், சத்யபால் சிங் ஆகியோரும் அமைச்சர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு அதிக எம்.பி.க்களை அளித்த உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதா? இல்லையா? என்பது பற்றியும் நரேந்திர மோடி முடிவு செய்கிறார். தனது அமைச்சரவை சிறிய எண்ணிக்கையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகவே, பெட்ரோலியம், மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற தனித்தனி இலாகாக்களை ‘எரிசக்தி’ என ஒரே இலாகாவாக ஆக்குவார் என்று தெரிகிறது.
 
அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடியை நேற்று அரசியல் கட்சி தலைவர்களும், அரசு அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், மோடியை சந்தித்து பேசினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது எம்.பி.க்களுடன் மோடியை சந்தித்துப் பேசினார். அவர், சீமாந்திரா அரசுக்கான நிதி உதவி திட்டம் பற்றி பேசியதாக கூறப்பட்டது. ஆனால், முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு, தனக்கு எதிராக ஊழல் வழக்குகளை தொடராமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் மோடியை கேட்டுக் கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை, நிதி, வர்த்தகம், ஊரக மேம்பாடு ஆகிய துறைகளின் செயலாளர்கள் ஆகியோரும் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.