வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (19:57 IST)

உடைகளை மாற்றுகிறார்; வேறு எதையும் மாற்றவில்லை : மோடி மீது ராகுல் கடும் தாக்கு

மோடிக்கு வெளிநாட்டு பயணங்கள் மற்றும் உடைகள் குறித்துதான் அதிக கவலை இருக்கிறது. நாட்டைப்பற்றி அல்ல என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.


 

 
பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ராகுல்காந்தி அங்கு தீவிரப் பிரசாரம் செய்துவருகிறார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசியபோது: 
 
“கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் பதினைந்து லட்சம் செலுத்தப்படும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார்.
 
ஆனால் யாருடைய வங்கி கணக்கிலாவது இதுவரை பதினைந்து லட்சம் செலுத்தப்பட்டுள்ளதா? இருந்தால், தயவு செய்து கூறுங்கள். அவர் வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.அவர் பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை ஒரு ஏழையை கூட சந்திக்கவில்லை. விவசாயிகள், ஏழை தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு கவலை இல்லை. வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவருடைய உடைகள் குறித்துதான் மோடிக்கு கவலை.
 
சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு நிகழ்வுகளில், பலப்பல வண்ணங்களுடன் பதினாறு உடைகளில் மோடி தோன்றியிருக்கிறார். எப்போதும் கார்பரேட் அதிகாரிகள் தான் கோட்சூட்டில் அவரை சுற்றி இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருப்பதாகவும், ஏழைகளுக்கு அறிவில்லை என்றும் பிரதமர் நினைக்கிறார்.
 
விவசாயிகள், தொழிலாளர்கள் யாராவது கிழிந்த உடையுடன், பிரதமர் அருகே நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரோ எப்போதும் வெள்ளை உடையுடன் எளிமையாக இருக்கிறார். இதனால்தான் பொதுமக்கள் அவரை சுலபாக அணுக முடிகிறது” என்று பேசினார்.