வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (20:51 IST)

’மோடியால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது’ - ப.சிதம்பரம்

மோடி இதே பாணியில் மத்திய அரசை தொடர்ந்து நடத்தினால், நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசியல் சாசன சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக செயல்பட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாஜக ஆட்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுக அதிகாரத்தில் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பாஜக அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் ஆலோசனைக்காக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு எதற்கு ஓடுகின்றனர்?
 
பாஜக ஆட்சியில் தினமும் குறைந்தது 4 அமைச்சர்களாவது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு ஓடுவதை கண்கூடாக காண முடிகிறது. இதுஒருபுறமிருக்க அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடமே வைத்துக் கொள்ள மோடி முற்படுகிறார்.
 
எல்லா முடிவுகளும் மோடியால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது எப்படி செயல்பட்டாரோ அதே போலவே இப்போதும் செயல்படுகிறார். மாநில முதல்வர் அப்படிச் செய்யலாம். ஆனால் நாட்டின் பிரதமர் அப்படிச் செய்ய முடியாது.
 
மோடி, இதே பாணியில் மத்திய அரசை தொடர்ந்து நடத்தினால், அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது; மற்றவர்களை குறை கூறி தங்கள் சுயரூபத்தை பாஜக மறைக்க முயல்கிறது” இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.