1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2026 (08:22 IST)

டிரம்பை பாகிஸ்தான் நல்லா ஐஸ் வைக்குது: பிரபல ஊடகவியலாளர் மெஹதி ஹசன் கருத்து..!

டிரம்பை பாகிஸ்தான் நல்லா ஐஸ் வைக்குது: பிரபல ஊடகவியலாளர் மெஹதி ஹசன் கருத்து..!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்போதைய மோதல் சூழலில், பாகிஸ்தானின் ராஜதந்திர நகர்வுகள் குறித்து பிரபல ஊடகவியலாளர் மெஹதி ஹசன் சமீபத்திய நேர்காணலில் அதிரடியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் கவனத்தை ஈர்ப்பதில் பாகிஸ்தான் மிகச்சிறந்த வேலையை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையை வழங்க முன்வந்ததையும், அதன் மூலம் ட்ரம்பின் ஈகோவை திருப்திப்படுத்தும் உத்திகளை அவர்கள் கையாளுவதையும் ஹசன் சுட்டிக்காட்டினார். 
 
குறிப்பாக, பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபரை ஓவல் அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதல் பாகிஸ்தானிய ஜெனரல் என்ற பெருமையை பெற்றுள்ளதை குறிப்பிட்ட அவர், அமெரிக்க வெளியுறவுக்கொள்கை தற்போது பகிரப்பட்ட நலன்களை விட தனிநபர் புகழ்ச்சியையே அதிகம் சார்ந்துள்ளதாக விமர்சித்தார்.
 
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் முன்னின்று நடத்த முயன்றாலும், இந்த சிக்கலை ஒரு வார இறுதிக்குள் தீர்த்துவிட முடியாது என்று ஹசன் எச்சரிக்கிறார்.
 
ஒபாமா காலத்தில் ஜேசிபிஓஏ ஒப்பந்தம் எட்டப்பட பல ஆண்டுகள் ஆனதை அவர் நினைவூட்டினார். தற்போதைய ஈரானிய தலைமை அவ்வளவு எளிதில் அடிபணியாது என்றும், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றும் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
 
Edited by Siva