வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (22:10 IST)

தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக கட்டணம்: மாணவர்கள் - பெற்றோர்கள் பந்த்

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக கட்டணம் வசூலை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பந்த் நடத்தினர்.
 

 
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகள், மாணவர்களிடம் அடாவடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்கள்பெற்றோர்கள் கூட்டமைப்பினர் இன்று பந்த் போராட்டதில் ஈடுபட்டனர்.
 
புதுச்சேரி மாநிலத்தில், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் புதுவை அரசுக்கு ஆண்டு தோறும் 50 சதவீதம் மருத்துவ இடங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் 30 சதவீதம் மட்டுமே வழங்குகிறது.
 
அதே போல, எம்எடி போன்ற  மருத்துவ உயர்படிப்பு  இடங்களும் புதுவை அரசுக்கு 50 சதவீதம் இடங்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியும், ஒரு இடம் கூட  வழங்கவில்லை. இதன் காரணமாக, ஆண்டுதோறும் சுமார் 500 கோடி ரூபாய்  அளவிற்கு முறைகேடு  நடப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள்,  மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும்  மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், தனியார் பேருந்து இயங்கவில்லை. கடைகள், பள்ளி, கல்லூரிகள்,  மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.
 
இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு சமுக அமைப்புகள் ஆதரவு அளித்தனர். இந்த பந்த் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.