1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By ILAVARASAN
Last Updated : புதன், 21 மே 2014 (10:19 IST)

தேர்தல் தோல்வி: பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து கமிட்டிகளும் கலைப்பு

உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் எல்லா கமிட்டிகளையும் கலைத்து அந்த கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
 
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. இக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஒரு வேட்பாளர்கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 20 எம்பி.க்கள் இருந்தனர். இதையடுத்து கட்சியின் இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணங்களை ஆராய்ந்து வரும் மாயாவதி நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏனைய தலைவர்களுடன் லக்னோவில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மட்டத் தலைவர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்த அவர், தேர்தலில் கட்சி தோற்றதற்கான காரணத்தை கேட்டறிந்தார். 
 
பின்னர் பேசிய அவர், கட்சியின் அனைத்து குழுக்களையும் அதிரடியாக கலைத்து அறிவித்தார். தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகளையும், ஒருங்கிணைப்பாளர்களையும் கடுமையாக கண்டித்த அவர், மக்களின் மனநிலையை பற்றி உண்மை நிலையை தனக்கு தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். கட்சிக்குள் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், கட்சியினர் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராகும்படி கேட்டுக் கொண்டார். தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தாமல், உண்மை காரணத்தை அறிந்து மக்களின் நம்பிக்கையை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் மாயாவதி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.