1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (01:53 IST)

மன்மோகன் சிங்கை விசாரிக்க அனுமதிக்கப்படவில்லை - சிபிஐ

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பிலான விசாரணை தொடர்பில், அத்துறை அமைச்சபாக பொறுப்பு வகித்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
இந்திய அரசு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று மத்திய புலனாய்வுத்துறையிடம் சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த சிபிஐ தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
பிர்லா குழுமத்துக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷா மாநிலத்தில் இரு சுரங்கங்களை மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு ஒதுக்கியது தொடர்பிலான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த காலப்பகுதியில் டாக்டர் மன்மோகன் சிங், நிலக்கரித் துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
 
மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இது தொடர்பில் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழலில் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.