58 லட்சம் பெயர்கள் வாக்காளர்களுக்காக மீண்டும் நீதிமன்றம் செல்வேன்: மம்தா பானர்ஜி சவால்
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பவானிபூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சுமார் 32 லட்சம் பெயர்கள் மட்டுமே மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்னும் 58 லட்சம் பெயர்கள் பரிசீலிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய மம்தா, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் உடனடியாக சேர்க்கப்படாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக போவதாக எச்சரித்துள்ளார். ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
பாஜகவின் சுவேந்து அதிகாரியை மீண்டும் எதிர்கொள்ளும் மம்தா பானர்ஜி, தனது அரசின் 'லட்சுமீர் பண்டார்' போன்ற நலத்திட்டங்கள் தங்களுக்கு பெரும் வெற்றியை தேடித்தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த் தேர்தல் களத்தில் பெங்காலி கலாச்சாரம் மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
Edited by Siva