மம்தா பானர்ஜி மீது கல்வீச்சு, சேறு வீச்சு.. இறந்த தொண்டரின் வீட்டுக்கு சென்றபோது நடந்த சம்பவம்...
மேற்கு வங்கம், ஹாலிஷாகர் பகுதியில் காவல் நிலைய காவலில் உயிரிழந்த கட்சி தொண்டரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை காவலில் இறந்த தொண்டர் விவகாரம் தொடர்பாக அப்பகுதிக்கு சென்ற மம்தா பானர்ஜிக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"திருடன், திருடன்" என்று முழக்கங்களை எழுப்பிய அவரது காரை தாக்கி கற்களை வீசியதுடன் சேற்றையும் பூசினர். அமைதியான பகுதிக்கு வந்து பதற்றத்தை ஏற்படுத்தவே மம்தா பானர்ஜி வந்ததாக கூறி பொதுமக்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டினார்.
காவல்துறை முன்னிலையிலேயே சமூக விரோதிகள் தனது கார் மீது பெரிய கற்கள் மற்றும் காலணிகளை வீசி தாக்கியதாக தெரிவித்த அவர், மேற்கு வங்கம் குண்டர்களின் கைகளில் சென்றுவிட்டதாக கூறினார். இதனிடையே, மம்தா பானர்ஜியின் வருகை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தவே என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
