1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mamata Banerjee's Trinamool Congress Faces Split as Rebel MPs Claim Increased Strength

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

மமதா பானர்ஜி
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவருமான மம்தா பானர்ஜிக்கு அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க துடிக்கும் அதிருப்தியாளர்கள் குழுவில், தங்களுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அக்குழுவின் தலைவர் காகோலி கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.
 
மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த எம்பி காகோலி கோஷ், தங்களது அதிருப்தி எம்பிக்களின் பலம் 20-லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளதாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 
 
தனிப்பிரிவாக தங்களை அங்கீகரிக்க கோரி சபாநாயகரை அதிருப்தி எம்பிக்கள் நாளை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, சதாப்தி ராய், மாலா ராய், பிரசூன் பானர்ஜி, சாயோனி கோஷ் ஆகிய நான்கு அதிருப்தி எம்பிக்கள் டெல்லியில் பாஜக எம்பி பூபேந்தர் யாதவ் இல்லத்திற்கு சென்று சந்திப்பு நடத்தியுள்ளனர்.
 
மறுபுறம், திரிணாமுல் காங்கிரஸின் 6 முறை எம்பியான மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவர் முறைப்படி அறிவிக்காவிட்டாலும், அதிருப்தியாளர்களுக்கு அவர் ஆதரவளிப்பது உறுதியாகியுள்ளது. காகோலி கோஷின் தலைமையின் கீழ் செயல்படச் சில எம்பிக்கள் தயக்கம் காட்டும் சூழலில், அனுபவம் வாய்ந்த சுதீப் பந்தோபாத்யாயின் வருகை அதிருப்தி முகாமிற்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva