1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2025 (16:59 IST)

மகாராஷ்டிர நகராட்சி தேர்தல்.. ஸ்வீப் செய்த பாஜக கூட்டணி.. மீண்டும் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!

மகாராஷ்டிர நகராட்சி தேர்தல்.. ஸ்வீப் செய்த பாஜக கூட்டணி.. மீண்டும் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!
மகாராஷ்டிர நகராட்சி தேர்தலில் ஆளும் 'மகாயுதி' கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 207 இடங்களை கைப்பற்றி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. இதில் பாஜக 117 இடங்களைப் பிடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 இடங்களையும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களையும் வென்றுள்ளன.
 
எதிர்க்கட்சிகள் வெறும் 44 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன. காங்கிரஸ் 28 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 மற்றும் சரத்பவாரின் கட்சி 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதியில் அஜித்பவார் தரப்பு 41 வார்டுகளில் 35-ஐக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சரத்பவார் கட்சி அங்கு ஒரே ஒரு வார்டில் மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
விதர்பா பகுதியில் சந்திராப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸிடம் பாஜக சில இடங்களை இழந்தாலும், கட்சிரோலி மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. அசோக் சவானின் நாண்டெட் மாவட்டத்தில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன.
 
Edited by Mahendran