வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (08:28 IST)

தேர்தலை சந்திக்கத் தயாராகுங்கள்: சரத் பவார் வேண்டுகோள்

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தலைச் சந்திக்க தயாராகங்கள் என்று தனது கட்சித் தொண்டர்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாகில் தேசியவாத காங்கிரஸின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகின்றது. அந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து அக் கட்சியின் தலைவர் சரத் பவார் உரையாற்றினார்.
 
அந்தக் கூட்டத்தில் சசரத் பவார் பேசியதாவது:-
 
மகாராஷ்டிரத்தில் நிலையற்ற அரசு அமைந்ததற்கு தேசியவாத காங்கிரஸ் பொறுப்பல்ல. மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு இடைக்காலத் தேர்தலைச் சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
 
மாநில சட்டப்பேரவையில் மஜ்லிஸ்-ஏ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் எழுச்சிக்கு பாஜகவில் உள்ள சில முக்கியமான சக்திகள்தான் காரணம். அவைதான் அக்கட்சிக்கு ஊக்கமளிக்கின்றன.
 
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இப்போதிருக்கும் அரசு நிலையானதாக இல்லாவிட்டால் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை தோன்றலாம்.
 
மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை தொடர்ந்தால் இன்னும் நான்கில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த மாநிலம் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
 
அது மகாராஷ்டிரத்தின் நலனுக்கு நல்லதல்ல. இந்தச் சூழ்நிலையில், நமது கட்சியை வலுப்படுத்துவதும், குறைகளை அகற்றுவதும் நமது பொறுப்பாகும்.
 
கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி பேசிய விதம் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானதாக இல்லை. முந்தைய தேர்தல் பிரசாரத்தின்போது தலைவர்கள் ஒருவித கண்ணியத்தைப் பராமரித்தனர். ஆனால் சமீபத்திய தேர்தல்களில் அவ்வாறு நடக்கவில்லை.
 
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசிவாத காங்கிரஸ், அரசை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது. இவ்வாறு சரத் பவார் கூறினார்.