1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (18:30 IST)

மாத்தையா “ரா” உளவாளி; பிரபாகரனை கொல்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா, இந்தியாவின் ’ரா’ அமைப்பின் உளவாளியாக செயல்பட்டார் என இந்திய பத்திரிகையாளர் நீனா கோபால் தெரிவித்துள்ளார்.
 

 
கோபாலசாமி மகேந்திரராஜா என்ற இயர்பெயரைக் கொண்ட மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர் 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார்.
 
இந்தியாவின் இந்திய உளவு அமைபான ‘ரா’ அமைப்புக்குப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டார் என்றும், விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டார்.
 
அதன்பேரில், 1993ஆம் ஆண்டு புலிகளால் கைதுசெய்யப்பட்டு 1994 டிசம்பர் 28ஆம் நாள் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அதை உறுதிசெய்யும் விதமாக கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலின் போது கவிஞர் காசி ஆனந்தனும் மாத்தையா, பிரபாகரனை கொலை செய்ய முயன்றார் என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், பத்திரிக்கையாளர் நீனா கோபால் எழுதியுள்ள புத்தகம் ’ராஜீவ்காந்தி படுகொலை’ [The Assassination of Rajiv Gandhi]. நீனா கோபால்தான் 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார்.
 
’ராஜீவ்காந்தி படுகொலை’ புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா, இந்தியாவின் ’ரா’ அமைப்பின் உளவாளியாக செயல்பட்டார் என்றும் பிரபாகரனை கொலை செய்வதே மாத்தையாவிற்கு வழங்கப்பட்ட வேலை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
இது குறித்து அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீனா கோபால், ”1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் உளவாளியாக மாத்தையா நியமிக்கப்பட்டார். 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பெரும்பான்மையானோர் நம்பிக்கையைப் பெற்று பின்னர் தலைவராக இருந்த பிரபாகரனை அழித்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பதுதான் மாத்தையாவுக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தது.
 
1993ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும், பிரபாகரனுடன் இளவயதில் இருந்தே பயணிப்பவருமான கிட்டு, வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை ’ரா’வுக்கு கொடுத்ததும் மாத்தையாதான்.
 
அந்தக் கப்பல் சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட்டபோது, கிட்டு கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார். கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்த விடுதலைப் புலிகள் அவரை கைது செய்தனர்.
 
1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் 'ரா' அமைப்பு ஊடுருவியது” என்று குறிப்பிட்டுள்ளார்.