5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரும் இனி மானிய விலையில் கிடைக்கும்: பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

Suresh| Last Updated: வியாழன், 11 டிசம்பர் 2014 (13:06 IST)
மானிய விலையில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரும் வழங்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அது, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஆகும். ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர் வீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

5 கிலோ எடைகொண்ட மினி சிலிண்டர்கள் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் கிடைத்து வருகின்றன. ஆனால், அவை சந்தை விலைக்குத்தான் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 5 கிலோ எடைகொண்ட மினி சிலிண்டரையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில் வழங்க தொடங்கி உள்ளன.

வழக்கமான கியாஸ் ஏஜென்சிகளிடமே இவை கிடைக்கும். தற்போது பயன்படுத்தி வரும் கியாஸ் இணைப்பு மூலமே இந்த சிலிண்டர்களைப் பெறலாம்.

5 கிலோ எடைகொண்ட இந்த மினி சிலிண்டரின் மானிய விலை ரூ.155 ஆகும். ஆண்டொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு 34 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கும்.
அதற்கு மேல் தேவைப்படுபவர்கள், சந்தை விலையான ரூ.351 கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். குறைந்த வருவாய் பிரிவினர், ஒரே நேரத்தில் அதிக பணம் செலவழிக்காமல் மானிய விலையில் சிலிண்டரைப் பெற இந்த புதிய முடிவு, வாய்ப்பு அளிக்கிறது.

இந்தத் தகவல்களை, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லி மேலவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
அதே சமயத்தில், 5 கிலோ சிலிண்டர்களை அறிமுகப்படுத்தினாலும், 14.2 கிலோ சிலிண்டர்களுக்கு மானியத்தை நீக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

5 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களை மானிய விலையில் பெறுவது குறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதன்படி, தற்போது பயன்படுத்தி வரும் கியாஸ் இணைப்பை பயன்படுத்தி, ஒருவர் 14.2 கிலோ சிலிண்டரையோ அல்லது 5 கிலோ சிலிண்டரையோ பெறலாம்.

ஆனால், கணக்கிடுவதற்கு வசதியாக, தனக்கு இரண்டுவகை சிலிண்டரில் எது வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் எழுதித்தர வேண்டும் ஓரிரு மாதங்கள் 14.2 கிலோ சிலிண்டரை வாங்கி விட்டு, அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே, 5 கிலோ சிலிண்டருக்கு மாற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, 5 கிலோ சிலிண்டரை ஓரிரு மாதங்கள் வாங்கி விட்டு, ஆண்டின் நடுவிலேயே, 14.2 கிலோ சிலிண்டருக்கு மாற முடியாது. ஓராண்டு முழுவதும் ஒரேவகை சிலிண்டரையே பயன்படுத்தியாக வேண்டும்.

14.2 கிலோ சிலிண்டர் என்றால் 12 என்றும், 5 கிலோ சிலிண்டர் என்றால் 34 என்றும் ஏற்கனவே எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு விட்டதால், பாதியிலேயே மாறுவது குழப்பத்துக்கு வழிவகுக்கும்.
ஒரு கிலோ சமையல் கியாசுக்கு மானிய தொகை ரூ.40 என்று பட்ஜெட்டிலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதனால்தான், வெவ்வேறு எடைகளில் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்குவது சாத்தியம் ஆகிறது.

இந்த 40 ரூபாயில், பட்ஜெட்டில் இருந்து 20 ரூபாயும், ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களிடம் இருந்து 20 ரூபாயும் பெறப்படும். கிலோவுக்கு இவ்வளவு என மானிய தொகை நிர்ணயிக்கப்பட்டு விட்டதால், 14.2 கிலோவில் சிலிண்டர் விற்கிறோமா, 5 கிலோவில் சிலிண்டர் விற்கிறோமா என்பது ஒரு பிரச்சினையே அல்ல.
பெட்ரோல் பங்க்குகளில் வழக்கம்போல 5 கிலோ சிலிண்டர்கள் சந்தை விலைக்கு தொடர்ந்து கிடைக்கும். அதற்கு முன்பதிவு செய்ய தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :