வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 18 மார்ச் 2015 (21:04 IST)

பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் - பெற்றோர் உறுதி!

எங்களது மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் பெற்றோர் கூறியுள்ளார்.
 
ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே.ரவி (35) கர்நாடக மாநில வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார். வார நாட்களில் தாவர்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், வார இறுதி நாட்களில் நாகர்பவியிலுள்ள உறவினர் வீட்டிலும் தங்குவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் டி.கே.ரவி எடுத்து வந்தார்.
 
இந்நிலையில், டி.கே.ரவி தாவர்கரே பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். ரவி மரணம் கர்நாடக மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் நேற்று முதல் கர்நாடக சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், டி.கே.ரவி மரணம் தொடர்பான வதந்திகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் தந்தை கரியப்பா, தாய் கவுரம்மா, சகோதரர் ரமேஷ், சகோதரி பாரதி ஆகியோர் பெங்களூரு விதான் சவுதா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, டி.கே.ரவியின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். அப்போது சி.ஐ.டி. விசாரணை அறிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால், சித்தராமையாவின் உறுதிமொழியை ஏற்க மறுத்த டி.கே.ரவியின் பெற்றோர், தங்களது மகனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
 
இதற்கிடையே, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும், ரவியின் பெற்றோரை சந்தித்து பேசினர்.