100 கோடி ஊழல்: பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 5 ஆகஸ்ட் 2015 (16:20 IST)
பிசிசிஐ தலைமை செயலாளரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் மீது 100 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
 
 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் பி.கே.தூமல் அவரின் மகனான அனுராக் தாகூர், பாஜக சார்பில் ஹமிர்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பிசிசிஐ தலைமைச் செயலாராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பி.கே.தூமல் முதல்வராக இருந்தபோது, அவரது மகன் அனுராக் தாக்கூர் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார்.
 
அப்போது மாநில கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த தர்மசாலாவுக்கு 16 ஏக்கர் நிலத்தை முதல்வர் பி.கே.தூமல் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அமைச்சரவை ஒப்புதலுடன் ஒதுக்கீடு செய்தார். முக்கியமான இடத்தில் உள்ள இந்த இடத்தின் மதிப்பு பல கோடி வரை இருக்கும்.
 
ஆனால் இந்த 16 ஏக்கர் இடம் மாதம் ரூ.1 என்று 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் பி.கே.தூமலின் மகன் அனுராக் தாக்கூர் ரூ.100 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் பி.கே.தூமல் தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது உறுதியாகி இருக்கிறது.
 
ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மோடி பிரதமரானார். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரின் ஊழல் விவகாரம் வெளியான பின்னர் அது பற்றி மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :