1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 18 ஜூலை 2015 (07:48 IST)

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மாநில அரசின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும், எனவே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகின்றது.
 
ஆனால், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது இந்த மசோதா 30 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள் அங்கம் வகிக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
 
அந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் கிராமப்புற அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
இந்நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:–
 
சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
 
அந்த வகையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் யாருடைய உரிமைகளும் மறுக்கப்படுவதோ, பறிக்கப்படுவதோ இல்லை.
 
கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற மாநில அரசுகள் உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் இப்போது திருத்த மசோதாவை எதிர்க்கிறார்கள்.
 
போதிய நிலத்தை கையகப்படுத்த முடியாததால் அடிப்படை கட்டுமான வசதி தொடர்பான பல்வேறு திட்டங்கள் முடங்கியுள்ளன. அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்தாமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது.
 
மாநில அரசின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.
 
முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விட இந்த மசோதாவின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.