நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றினால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை


K.N.Vadivel| Last Modified வெள்ளி, 24 ஜூலை 2015 (04:11 IST)
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றினால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
 
 
நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து நாடாளுமன்றம் நியமித்துள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுமக்களின் கருத்தை அறியும் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
 
முந்தைய காங்கிரஸ் அரசு முன்வைத்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முனைந்துள்ளது. இதற்காகக் குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் 3 முறை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, மீண்டும் அவசரச் சட்டப் பிரகடனம் செய்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
 
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, நாடெங்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடுகிறார்கள். காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அரசு, ஒஎன்ஜிசியை அனுமதித்துள்ளது.
 
ஒஎன்ஜிசி பணிகளை மேற்கொண்டால் விவசாய நிலத்தின் அடிப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு கடல் நீர் புகுந்து விடும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமைக்கு ஆளாவார்கள். அதை பயன்படுத்தி நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பெரு நிறுவனங்களுக்கு வழங்குவதுதான் அரசின் திட்டமாகவுள்ளது. இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நில மசோதா நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார். 
 


இதில் மேலும் படிக்கவும் :