வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 11 மார்ச் 2015 (11:15 IST)

நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது: எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு

எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், 'முக்கிய துறைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் சம்மதம் பெற தேவையில்லை' என்பது உள்ளிட்ட அம்சங்களை சேர்த்து பாஜக அரசு கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது.
 
இந்த சட்டத்துக்கு மாற்றாக, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி, பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் 'நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் (திருத்தம்) மசோதா–2015' என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மசோதா, 'விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது' என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெவித்தன. அதைத் தொடர்ந்து, மசோதாவில் குறைகள் இருப்பதாகக் கருதினால், திருத்தங்கள் செய்யத்தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
 
இந்நிலையில் மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது. நேற்று 2ஆவது நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக பாஜக அரசின் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, வீரேந்தர் சிங் ஆகியோர் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சி தலைவர்களிடையே பேசினர்.
 
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் மசோதா மீது 2ஆவது நாளாக விவாதம் நடந்தது. எம்.பி.க்கள் காரசாரமாக விவாதித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் சம்மதம் பெறுவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கேட்டுக்கொண்டது.
 
காங்கிரஸ் கட்சி, 'மசோதாவில் நிலம் கையகப்படுத்துவதற்கு தங்களின் சம்மதம் பெற வேண்டும் என்ற பிரிவும், சமூக பாதிப்பு அளவீடு குறித்த பிரிவும் இடம்பெற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலைத்தான் கேட்கிறது. இதை விட வெட்கக்கேடு வேறொன்றும் இல்லை' என்று கூறியது.
 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 'ஜனநாயகத்தை கவிழ்க்கிற வகையில் இந்த மசோதாவை அரசு கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தது. பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும், இந்த மசோதா ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வந்திருப்பதாகக் கூறி," குற்றம் சாற்றினர்.
 
இதைத் தொடர்ந்து, லோக்ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், விவசாயிகளின் நலனை என்ன விலை கொடுத்தாவது காப்போம் என்று பிரதமர் வாக்குறுதி வழங்கி இருப்பதால், அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மசோதாவை ஆதரித்து பேசினார்.
 
எதிர்க்கட்சிகள் மற்றும் சில கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் மசோதாவில் அரசு தரப்பில் 9 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 2 உட்பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 52 திருத்தங்களை கொண்டு வந்தனர். அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது.
 
இதில் நிலம் கையகப்படுத்தப்படும்போது நிலம் வழங்கியவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற விதியை சேர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொண்டது.
 
இந்த ஓட்டெடுப்பில் பாஜக தரப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நிறைவேறின. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த திருத்தங்கள் முறியடிக்கப்பட்டன. ஓட்டெடுப்பு நடைபெற்றபோது, 'நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும்' என்று தாங்கள் கொண்டு வந்த சட்டத்தின் அம்சத்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
 
இதே போன்று திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.
 
இதைத் தொடர்ந்து, குரல் ஓட்டெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது. மசோதாவை அதிமுக ஆதரித்தது.
 
நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, டெல்லி மேல்சபையான மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டும்.
 
பாஜகவுக்கு அங்கு போதுமான பலம் இல்லை என்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.