செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2015 (14:53 IST)

கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது பயங்கர மோதல்: கண்ணீர்புகைகுண்டு வீச்சு

கேரள மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது ஆளுங்கட்சியினருக்கும் எதிர் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
 
கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம். மாணி நிதியமைச்சராக உள்ளார்.
 
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு மதுபான பார்களை மூட உத்தர விட்ட போது, அவற்றை திறக்க ஏற்பாடு செய்வதாக கூறி மதுபார் உரிமையாளர்களிடம் நிதியமைச்சர் மாணி லஞ்சம் பெற்றார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
 
மதுபார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜு ரமேஷ், நிதியமைச்சர் மாணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
 
இதையடுத்து நிதியமைச்சர் மாணி பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் கேரள சட்டசபையில் இன்று மாணி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்டு கட்சியினர் சட்டசபையில் நிதியமைச்சர் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம் என்று அறிவித்தனர்.
 
இதற்கு முதலமைச்சர் உம்மன்சாண்டி கண்டனம் தெரிவித்தார். மாணி மீது எந்த தவறும் இல்லை என்றும், 13 ஆம் தேதி (இன்று) அவர் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் கூறினார்.
 
மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தால் அவரை சட்ட சபைக்குள் விட மாட்டோம், வழியிலேயே மறித்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கம்யூனிஸ்டு கட்சியினரும், பாஜக இளைஞரணியினரும் அறிவித்தனர். இதனால் நேற்று மாலை சட்டசபை கூட்டம் முடிந்த பின்னர் நிதியமைச்சர் மாணி வீட்டுக்கு செல்லாமல் சட்டசபை வளாகத்திலேயே தங்கினார்.
 
அவருடன் நிதி இலாகா ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்களும் இருந்தனர். 
 
மாணி சட்டசபை அலுவலகத்தில் தங்கி இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகத்திலேயே தங்கி விட்டனர். அவர்களும் வீடு திரும்ப மறுத்து விடிய விடிய அங்கேயே இருந்தனர்.
 
அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும், பாஜக இளைஞரணியினரும் சட்டசபை வளாகம் முன்பு குவிந்தனர்.
 
உம்மன்சாண்டி இரவு 12 மணிக்கு வீடு திரும்பினார். பின்னர் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சட்டசபைக்கு வந்தார். இதையடுத்து திருவனந்தபுரம் காவர்துறை ஆணையர் தலைமையில், கேரள தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
 
அவர்கள் சட்டசபை வளாகம் செல்லும் அனைத்து சாலைகளையும் சீல் வைத்தனர். சட்டசபையின் 5 வாயில்களும் மூடப்பட்டன. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. சில கம்யூனிஸ்டு தொண்டர்களும், பாஜக இளைஞரணியினரும் தடுப்புகளை அகற்றி சட்டசபை வளாகத்திற்குள் செல்ல முயன்றனர்.
 
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் தொண்டர்களும் அணி அணியாய் திரண்டு சட்டசபை முன்பு குவிந்தனர். இதனால் திருவனந்தபுரத்தில் விடிய விடிய பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் கேரள சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கை முன்பு சென்று ஆவேசமாக கூச்சலிட்டனர். பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று கோஷமிட்டனர்.
 
அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் கூறினார். அதை கேட்க மறுத்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளை எடுத்து வீசினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
 
போராட்டம் காரணமாக சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் இருக்கையை தூக்கி வீசி உடைத்தனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் நிதியமைச்சர் மாணியை முற்றுகையிட்டு அவர் பட்ஜெட் உரையை படிக்க விடாமல் தடுத்தனர். உடனே அவர் பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்வதாக கூறி மேஜை மீது அதனை வைத்தார்.
 
மாணி பட்ஜெட்டை படிக்க விடாமல் தடுத்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் தடுத்தனர். இதனால் சபைக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் அமளி நிலவியது.
 
இதற்கிடையே கேரள சட்டசபைக்குள் எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் கலவரம் போல மாறியது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்களும் மோதிக் கொண்டனர். இதனால் சட்டசபை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் நகலை கிழித்து எறிந்து வீசினர்.
 
திடீரென காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து மோதலில் ஈடுபட்டனர். மேஜையில் இருந்த பேப்பர் வெயிட் மற்றும் பட்ஜெட் காகிதங்களை வீசி எறிந்தனர். அவர்களை சபை காவலர்கள் கட்டுப்படுத்த முயன்றனர்.
 
இதற்கிடையில், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்களை சபை காவலர்கள் உடனடியாக வெளியே கொண்டு சென்றனர்.
 
இதைத் தொடர்ந்து, சட்டசபைக்கு வெளியில் திரண்டிருந்த கம்யூனிஸ்டு – பாஜக தொண்டர்களும் திடீர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
 
தண்ணீரை பீச்சு அடித்தும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் விரட்டப்பட்டனர். அதன் பிறகும் கம்யூனிஸ்டு தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாததால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை கலைத்தனர்.