கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம்: உம்மன் சாண்டி

Oommen Chandy
Suresh| Last Modified வெள்ளி, 13 மார்ச் 2015 (14:38 IST)
கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம் என்று அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.

இது குறித்து உம்மன் சாண்டி கூறியதாவது:–

கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம் ஆகும். சட்டசபைக்குள் எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் வேதனையை தருகிறது.
சபையை நடத்த விடாமல் எதிர்கட்சிகள் இவ்வாறு போராடுவது மன்னிக்க முடியாத குற்றம். போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் கேரள சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கை முன்பு சென்று ஆவேசமாக கூச்சலிட்டனர். பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று கோஷமிட்டனர்.
மாணி பட்ஜெட்டை படிக்க விடாமல் தடுத்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் தடுத்தனர். இதனால் சபைக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் அமளி நிலவியது. இந்த அமளிக்கு இடையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே கேரள சட்டசபைக்குள் எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் கலவரம் போல மாறியது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்களும் மோதிக் கொண்டனர். இதனால் சட்டசபை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
இதற்கிடையில், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்களை சபை காவலர்கள் உடனடியாக வெளியே கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து, சட்டசபைக்கு வெளியில் திரண்டிருந்த கம்யூனிஸ்டு – பாஜக தொண்டர்களும் திடீர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
தண்ணீரை பீச்சு அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :