வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 3 மே 2014 (17:29 IST)

'தேன்நிலவு போகும் ராகுல்': பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேன்நிலவுக்குப் போவதுபோல் தலித் மக்களின் வீடுகளுக்குப் போகிறார் ராகுல் காந்தி என்று பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசிய பாபா ராம்தேவ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கிப் பேசினார்.
 
அப்போது அவர், "உல்லாசப் பயணம் மற்றும் தேன்நிலவுக்கு போவதுபோல் தலித் வீடுகளுக்கு ராகுல் காந்தி சென்று வருகிறார். ஒரு தலித் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் அந்த வாய்ப்பில் அவர் பிரதமராகி இருக்க முடியும்" என்று ராகுல் காந்தியை அவர் நேரடியாகவே விமர்சித்திருந்தார்.
 
இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் மக்களை கேவலப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் மற்றும் தலித் அமைப்புகள் அறிக்கையும் வெளியிட்டிருந்தன.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த விஜய் ராவ் என்பவர், இந்த தேன்நிலவு பேச்சு தொடர்பாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு இன்று உத்தரவிட்டார்.