இந்தியாவில் 5G FWA சேவை: ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி வளர்ச்சி!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 2026 மார்ச் மாதத்தில் அதிகப்படியான 5G FWA (Fixed-Wireless Access) சந்தாதாரர்களை இணைத்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ஜியோ 2.41 லட்சம் புதிய பயனர்களை இணைத்துள்ளது. இதே காலகட்டத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.48 லட்சம் பயனர்களை மட்டுமே ஈர்த்துள்ளது.
இதன் மூலம் ஜியோவின் ஒட்டுமொத்த 5G FWA பயனர்களின் எண்ணிக்கை 8.58 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஏர்டெல் 3.73 மில்லியன் பயனர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இரு நிறுவனங்களும் இந்த சேவையை AirFiber என்ற பெயரில் வழங்கி வருகின்றன. ஃபைபர் கேபிள்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ள இடங்களுக்கு, அதிவேக இணையத்தை எளிதாக கொண்டு சேர்ப்பதே இந்த ஏர்ஃபைபர் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜியோவின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு அந்த நிறுவனம் ஏற்கனவே 5G SA தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது முக்கிய காரணமாகும். தற்போது ஏர்டெல் நிறுவனம் 5G SA தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வோடபோன்-ஐடியா போன்ற மற்ற நிறுவனங்கள் இன்னும் இந்த போட்டியில் களமிறங்காத நிலையில், இந்தியாவின் 'ஏர்ஃபைபர்' சந்தையில் ஜியோ ஒரு பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
Edited by Siva
