வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (17:49 IST)

மக்கள் அவதிப்படுகையில் ரூ. 500 கோடி செலவில் திருமண ஏற்பாடு செய்யும் பாஜக பிரமுகர்

பிரபல சுரங்க தொழில் அதிபரும், பாஜக முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டி, தனது ஒரே மகளின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.


 

பாஜக முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும், ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் இன்று [நவம்பர் 16ஆம் தேதி] திருமணம் நடைபெறவுள்ளது.

விருந்தினர்கள் பலர் ஹெலிகாப்டர்களில் வரவிருப்பதால் திருமணம் நடைபெறும் இடத்தின் அருகே 15 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களுரு மற்றும் சுற்று வட்டாரங்களில்  1,500 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன.

பண்டைய அரச குடும்பத்தில் திருமணம் நடந்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே தனது மகளின் திருமணத்தையும் அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டித் திட்டமிட்டு இருந்தார். இதனால், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர்களைக் கொண்டுதான் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ்வரா சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கருப்பைப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்கு இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.