வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 9 மார்ச் 2015 (18:25 IST)

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி; இந்தியாவின் ஒரு பகுதி அல்ல - சையது அலி ஷா கிலானி

ஹூரியத் தலைவர்களில் ஒருவரான மஸரத் ஆலம் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் அவருடைய விடுதலையில், பெரிய பேரம் எதுவும் இல்லை எனவும் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிலானி கூறியதாவது:-
 
“ மஸரத்தை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பல முறை அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். அவர் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது விடுதலையில் எந்த பெரிய பேரமும் கிடையாது. அதுபோல, அவர் மீதான குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை. அவரை எனக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்தார்.
 
மேலும், ஜம்மு காஷ்மீர்  சர்ச்சைக்குரிய பகுதி என்றும் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்ற உண்மை நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அவர் கூறுகையில், “ எந்த அரசு ஆட்சிக்கு  வந்தாலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. இது ஒரு வெளிப்படையான அரசியல் நாடகம் (முப்தி ஹூரியத் அமைப்பை பாராட்டியது). ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்ற உண்மை நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
 முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி, பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலமை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு பாரதீய ஜனதாவும் பிற எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்கட்சிகளும் கடும் அமளியில் ஈடுபட்டன.
 
இதையடுத்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, ”ஆலம் விடுதலைக்கு முன்பு மத்திய அரசிடம் ஜம்மு காஷ்மீர் அரசு எந்த ஒரு தகவலையோ அல்லது கலந்தாலோசிக்கவோ இல்லை. நாட்டின் ஒற்றுமையில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் இல்லை என்று இந்த நாட்டிற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆலம் விடுதலை குறித்த கவலை எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தது இல்லை. ஒட்டுமொத்த நாட்டையும்  சார்ந்தது” என்று  தெரிவித்துள்ளார்.
 
முஸ்லீம் லீக் கட்சியின் சேர்மனான ஆலம், சையது அகமது ஷா கிலானியின் தலைமையிலான ஹூரியத் அமைப்பில் முக்கிய பிரமுகராக விளங்கி வருகிறார். கிலானிக்கு பிறகு ஹூரியத் அமைப்பின் தலைவராக வருவார் என்று கருதப்படும் இவர், கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கல் எறியும் போராட்டத்தை நடத்தி காஷ்மீர் பள்ளத்தாக்கில் 112 பேர் பலியாக காரணமாக இருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.