வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 15 மே 2015 (11:13 IST)

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா சுவராஜ்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
 
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மொசூல் நகரை கைப்பற்றிய போது, அங்கு இருந்து இந்திய கட்டிட தொழிலாளர்கள் 40 பேரை கடத்தி சென்றனர்.
 
அதில் ஒருவரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி இந்தியா வந்துவிட்டார்.
 
அப்போது அவர் மற்ற 39 பேரையும் தீவிரவாதிகள் கொன்று விட்டதாக கூறினார். ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் இதுவரை கூறவில்லை.
 
இந்நிலையில், ஹர்ஜித் மாசி, மொகாலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று விட்டனர்" என கூறினார்.
 
இந்நிலையில், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் டெல்லி சென்று சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்துப் பேசினர்.
 
அப்போது அவர்களிடம், சுஷ்மா சுவராஜ், "எனக்கு கிடைத்த தகவல்கள்படி, 39 இந்தியர்களும் உயிரோடுதான் உள்ளனர்" என்று கூறினார்.
 
மேலும், "இந்திய தொழிலாளர்கள் பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது" எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.