நாளை சிஏ தேர்வு முடிவுகள்.. இன்று தேர்வு இணையதளம் ஹேக்.. தேர்வு எழுதியவர்களின் நிலை என்ன?
நாளை அதாவது ஜூன் 18-ஆம் தேதி சிஏ இறுதித் தேர்வு முடிவுகளும், ஜூன் 24-ஆம் தேதி இடைநிலைத் தேர்வு முடிவுகளும் வெளியாகவிருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று ஐசிஏஐ தேர்வுத்தளம் ஹேக் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சோவிகோ' என்ற பெயரைக் கொண்ட ஹேக்கர், ஐசிஏஐ தேர்வுத்தளத்தின் சூப்பர் அட்மின் அணுகுமுறையை பெற்று, சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் விவரங்களை முடக்கியுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மே 2026-ல் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், மதிப்பெண்களை மாற்றும் அதிகாரம் மற்றும் தேர்வு நடத்துபவர்களின் சுயவிவரங்கள் ஆகியவற்றைத் தான் ஹேக் செய்துள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.
இருப்பினும், இந்த தரவு கசிவு குறித்து ஐசிஏஐ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில், இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று மற்றொரு எக்ஸ் பயனர் மறுத்துள்ளார்.
இந்த தளத்தில் விடைத்தாள்கள் எதுவும் பகிரப்படுவதில்லை என்றும், வெறும் தேர்வு முடிவுகளின் எக்செல் தாள்கள் மட்டுமே பதிவேற்றப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், முடிவுகள் வெளியாவதற்கு முன்பு பலகட்ட சரிபார்ப்புகள் உள்ளதால், பழைய தரவுகளை வைத்துக்கொண்டு இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva
