1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (01:02 IST)

லலித் மோடிக்கு சென்ற வேகத்தில் திரும்பிய அமலாக்கப் பிரிவு சம்மன்

ஐபிஎல் முறைகேடு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கக் கோரி அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை லலித் மோடி வழக்கறிஞர் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது, ஒளிபரப்பு உரிமை குறித்து வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப், மல்ட்டி ஸ்கிரீன் மீடியா இடையே கடந்த 2008ஆம் ஆண்டு  உடன்பாடு ஏற்பட்டது.
 
இந்த உடன்பாட்டில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும், வேறு சிலரும் ரூ.425 கோடி ஊழல் புரிந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு பீறியிட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த விவகாரத்தில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி 3 வார காலத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
 
இந்த சம்மன், மும்பையில் உள்ள லலித் மோடியின் வழக்கறிஞர் மெகமூத் எம். அப்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த சம்மனை வாங்க எனக்கு லலித் மோடி அதிகாரம் வழங்கவில்லை என கூறி, அந்த சம்மனை வாங்க மறுத்து, அதை, மத்திய அமலாக்க இயக்குனர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி விட்டார்.
 
இந்நிலையில், லிலத் மோடி இந்த விசாரணைக்கு இந்தியா வருகை தருவாரா என பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.