டிகே சிவகுமார் பதவியேற்ற இரண்டே நாளில் குழப்பம்.. ராஜினாமா செய்ய போவதாக அமைச்சர் மிரட்டல்?
கர்நாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்ற சில நாட்களிலேயே, உட்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி வெடித்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவரும், எட்டு முறை சட்டமன்ற உறுப்பினருமான ராமலிங்க ரெட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட நீர்ப்பாசன துறையில் அதிருப்தி அடைந்து, பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
72 வயதான ராமலிங்க ரெட்டி, பெங்களூரு நகரின் பிடிஎம் லேஅவுட் தொகுதியை சேர்ந்தவர். அவர் கர்நாடக அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெங்களூரு நகர மேம்பாட்டு துறையை கேட்டுள்ளார். ஆனால், அந்த துறை அவருக்கு மறுக்கப்பட்டு கிருஷ்ண பைரே கவுடாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமக்கு பெங்களூரு மேம்பாட்டுத்துறை தவிர வேறு எந்த துறையும் வேண்டாம் என்பதில் ரெட்டி பிடிவாதமாக உள்ளார்.
முன்னதாக, டி.கே.சிவகுமார் வசம் இருந்த இந்த துறை தற்போது கைமாறியுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து மற்றும் உள்துறைகளை கையாண்ட அனுபவமிக்க ராமலிங்க ரெட்டி, தனது அதிருப்தியை தலைமயிடம் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழல் குறித்து அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆரம்பத்திலேயே பெரும் தலைவலி உருவாகியுள்ளது.
Edited by Siva
