ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: முன்பதிவு டிக்கெட்டின் தேதியை இனி ஆன்லைனில் மாற்றலாம்!
ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களின் பயண தேதியை ஆன்லைனில் மாற்றுவதற்கான புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. ரயில்வே சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் இந்த சேவை, 2026 ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கட்டணம் செலுத்தி, முன்பதிவு கவுண்டரில் மட்டுமே தேதியை மாற்ற முடியும். ஆனால், வரவிருக்கும் இந்த ஆன்லைன் வசதி, முன்பதிவு கவுண்டர்களில் ஏற்படும் நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் சேவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆன்லைன் முறை செயல்படுத்தப்பட உள்ளது. பயணத் தேதியை மாற்றுவதற்கான 48 மணி நேர முன்கூட்டிய கால வரம்பு ஆன்லைன் முறையிலும் தொடர வாய்ப்புள்ளது.
இந்த ஆன்லைன் சேவைக்கான கட்டண அமைப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பயணிகளின் நலன்களையும் செயல்பாட்டு செலவுகளையும் கருத்தில் கொண்டு, சேவை தொடங்கும் நேரத்தில் கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வசதி, பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் அளிக்கும் என்பதால், இதற்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
Edited by Siva