ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கூடுதல் ரீஃபண்ட்.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்..!
இந்திய இரயில்வே தனது பயண விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. இனி பயணிகள் தாங்கள் இரயிலில் ஏறும் நிலையத்தை இரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மாற்றி கொள்ளலாம். இதற்கு முன்பு இருந்த 24 மணி நேர கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர நெருக்கடிகளை குறைக்கவும் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய விதியின்படி, உறுதி செய்யப்பட்ட அல்லது ஆர்ஏசி டிக்கெட் வைத்துள்ள பயணிகள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. பயணிகள் தங்களின் ஏறும் நிலையத்தை ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் செயலி அல்லது இரயில்வே முன்பதிவு மையங்களுக்கு சென்று எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
அத்துடன் டிக்கெட் ரத்து செய்யும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம், 24 மணி நேரம் மற்றும் 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்பவர்களுக்கு கூடுதல் ரீஃபண்ட் கிடைக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் அல்லது திடீர் திட்ட மாற்றங்களால் ஏறும் நிலையத்தை அடைய முடியாத பயணிகளுக்கு இந்த புதிய விதிமுறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Edited by Siva