வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2015 (17:29 IST)

’இந்தியாவின் மகள்’ படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம் - லெஸ்லி உட்வின்

டெல்லி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படமான ’இந்தியாவின் மகள்’ படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம் என்று படத்தின் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.
 
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
 

 
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம்  பி.பி.சி.–4 குழுவினர் மற்றும் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்திற்காக பேட்டி கண்டார்.
 
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டியை பி.பி.சி முழுமையாக வெளியிட்டது.
 
இது தொடர்பாக இந்திய அரசு பிபிசி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம் என்பது சர்வதேச அளவிலான கருத்து என்று லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக கூறியுள்ள லெஸ்லி உட்வின், ”உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாகப் புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது.
 
நிர்பயாவுக்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போடத் தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது.
 
படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம், அரசியல்சாசன சட்டத்துக்கு முரணானது என்பதே சர்வதேச அளவிலான கருத்து. ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள பேட்டிகளுக்கு நான் பணம் கொடுத்ததாக இந்திய ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை.
 
சட்டப்படி உரிய அனுமதி பெற்றுதான் திஹார் சிறையில் உள்ள கொலை குற்றவாளியை பேட்டி எடுத்தேன். அவரது பேட்டி எந்த இடத்திலும் வெட்டப்படவில்லை.
 
இந்திய உள்துறை அமைச்சகம், காவல் துறையினரின் உரிய அனுமதியுடன், காவல் துறையினர், மருத்துவர்கள் முன்னிலையில் குற்றவாளியிடம் அந்த பேட்டி எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.