1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (14:33 IST)

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கருவியாக பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாத தடுப்பு மாநாடு 2015ல் கலந்து கொண்டு பேசும்போது, பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பு ஆகியவை தீவிரவாத குழுக்களை ஆதரிப்பதை நிறுத்தினால், தெற்காசியாவில், பாதுகாப்பு சூழ்நிலை முன்னேற்ற நிலையை அடையும் என கூறினார்.
 
ஜெய்பூரில் இன்று நடந்த தீவிரவாத தடுப்பு கட்டுப்பாட்டு மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நல்ல தீவிரவாதி அல்லது மோசமான தீவிரவாதி என யாரும் இல்லை. தனது சுய விருப்பத்திற்காக தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்.
 
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அவர்கள் எந்த தீவிரவாத குழுக்களுடனும் தொடர்பில் இல்லாதவர்கள். இணையதளம் வழியே இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக குழுக்களில் இணைய செய்யும் முயற்சியில் ஈடுபடுவது என்பது ஆபத்தான ஒரு விசயமாகும் என ராஜ்நாத் சிங் கூறினார்.
 
ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் பன்முக சமுதாயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்.  அவர்கள் சுதந்திர மற்றும் சமத்துவ ஜனநாயக முறையை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என ராஜ்நாத் சிங் கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, அடிப்படை உண்மையான, நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றின் பன்முக தன்மையானது, மனித இனத்தின் உள்ளடங்கிய அழகை பிரதிபலிப்பவை என்பதை இதுபோன்ற தீவிரவாத குழுக்கள் ஏற்று கொள்வதில்லை என கூறினார்.
 
இத்தகைய தீவிரவாதிகள் வன்முறையின் மோசமான முறையை மேற்கொண்டு பன்முக தன்மையை அழிப்பதுடன், ஜனநாயக முறையை நிலையற்றதாகவும் மாற்றி விடுகின்றனர்.  அவர்கள் தங்களது நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளை பரப்ப நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஏற்ற வகையில் தங்களை தகவமைத்து கொள்கின்றனர் என ராஜ்நாத் சிங் கூறினார்.
 
அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஒரு சில இந்திய இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.  தங்களது குடும்பத்தின் தூண்டுதலை அடுத்து சிலர் திரும்பியும் வந்து உள்ளனர் என உறுதிபட கூறினார்.