பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் நானும் ஒருத்தி: வினேஷ் போகத்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் நானும் ஒருத்தி என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தற்போதைய சூழல் காரணமாக தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதாக அவர் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாட்சியங்கள் இன்னும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள வினேஷ், பிரிஜ் பூஷணின் அதிகார பிடி இன்னும் மல்யுத்த கூட்டமைப்பில் தொடர்வதை கண்டு வேதனை தெரிவித்துள்ளார். தான் இன்னும் கூட்டமைப்பை நடத்துவதாக பிரிஜ் பூஷண் பகிரங்கமாகக் கூறுவது, வீராங்கனைகளுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரை கொன்றுவிட்டதாக அவரே வீடியோவில் ஒப்புக்கொண்ட பிறகும், அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வினேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்பார்ப்பை சுமந்து களமிறங்கும் வீராங்கனைகள், இத்தகைய அச்சுறுத்தலான சூழலில் எவ்வாறு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு சிறப்பு சலுகைகள் தேவையில்லை என்றும், குண்டர்களின் ஆதிக்கமின்றி வீரர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் நேர்மையான தீர்ப்பே வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Edited by Siva