ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கொன்ற கணவன்.. சாலை விபத்து போல் நாடகம்..!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில், தனது மனைவி சேவந்தி குமாரி பெயரில் மூன்று மாதங்களுக்கு முன் எடுத்த ரூ.15 லட்சம் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக, அவரை கொலை செய்துவிட்டு சாலை விபத்து நாடகமாடிய கணவன் முகேஷ் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 9 அன்று சேவந்தி இறந்த நிலையில், முகேஷ் அது விபத்து என்று கூறியதை அவரது தந்தை மகாவீர் மேத்தா நம்பவில்லை. தன் மகள் பெயரில் முகேஷ் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்த தகவலை அவர் போலீஸில் தெரிவித்தார்.
விசாரணையில், சேவந்தியின் உடலில் சாலை விபத்திற்கான காயங்கள் மிக குறைவாக இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. மேலும், முகேஷ் மனைவியின் இறுதி சடங்கிலும் கலந்துகொள்ளவில்லை.
தீவிர விசாரணைக்கு பிறகு, முகேஷ் தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், காப்பீட்டுப் பணத்திற்காக விபத்து நாடகத்தை அரங்கேற்றியதாகவும் ஒப்புக்கொண்டார்.
காவல்துறையினர் முகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரைச் சிறப்பு காவலில் வைக்க உத்தரவிட்டது.
Edited by Siva