நாடாளுமன்றம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் பதட்டம்..!
தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை டெல்லி காவல்துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலில், பிப்ரவரி 13-ஆம் தேதி மதியம் 1.11 மணிக்கு நாடாளுமன்றத்தில் குண்டு வெடிக்கும் என்றும், டெல்லி 'காலிஸ்தானாக' மாறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் தேசிய இராணுவம் மற்றும் அப்சல் குரு ஆகியோரின் பெயரில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 13-ஆம் தேதியைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva