ஹரியானாவில் மாட்டிறைச்சிக்கு தடை: ஜாமீன் பெற முடியாத குற்றமாக அறிவிப்பு

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 17 மார்ச் 2015 (20:22 IST)
ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவது, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இறைச்சிக்காக பசுக்கள்
கொல்லப்படுவதை தடுக்க, நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் பசுவதை தடை சட்டம் கொண்டு வந்து அதை
நிறைவேற்றியுள்ளது. அங்கு மாடுகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ஹரியானா மாநிலத்திலும் பசுவதை தடை சட்டம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். ஹரியானாவில் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என அம்மாநில அரசு முனைப்பு காட்டி வந்தது. அதற்கான வரைவு மசோதாவை தயாரித்திருந்தது. அதில் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என
கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பசுவதை தடை சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இந்த மசோதாவில் சில திருத்தங்கள்
இடம்பெற்றிருந்தன. அதில், பசுவை கொன்றால் குறைந்தது 3 ஆண்டுகள் வரையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.50
ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் பெற முடியாத குற்றமாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் மாடுகள் இறந்தால், அது பசுவதை தடை சட்டத்தின் கீழ் வராது.

பசுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாடுகளை பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும். கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பசுவதை தடை சட்டத்துக்கு எதிர்க்கட்சியினர்
எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் கூறிய திருத்தங்களை இந்த அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :