ஜெப்டோ , புக்மைஷோ செயலிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த மத்திய அரசு.. என்ன காரணம்?
ஆன்லைனில் காய்கறி வாங்குவது, திரைப்படம் மற்றும் விமான கட்டணங்களை முன்பதிவு செய்வது அல்லது கல்வி வகுப்புகளில் சேர்வது என அனைத்திற்கும் இன்று செயலிகளையே நம்பியிருக்கிறோம். தொடக்கத்தில் திரையில் தெரியும் கட்டணம், இறுதியாக பணம் செலுத்தும் பக்கத்தை அடையும் போது கூடிக்கொண்டே போவதை நாம் கவனித்திருப்போம்.
ஹேண்ட்லிங் கட்டணம், தானாக இணையப்படும் உறுப்பினர் சந்தா, 'ப்ரீ-டிக்' செய்யப்பட்ட நன்கொடைகள் மற்றும் மறைமுக கட்டணங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் 'டார்க் பேட்டர்ன்' முறையை கையாண்ட 9 பிரபல நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் ஜெப்டோ நிறுவனத்திற்கு 'டிரிப் ப்ரைசிங்' மற்றும் சந்தா திணிப்பிற்காக ரூ.7 லட்சமும், பிசிக்ஸ் வாலா நிறுவனத்திற்கு நன்கொடை திணிப்பிற்காக ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புக்மைஷோ தொண்டு நிறுவன கட்டணத்தை தானாக தேர்ந்தெடுத்ததற்காகவும், இண்டிகோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் 'கான்ஃபர்ம் ஷேமிங்' மெசேஜ் அனுப்பியதற்காகவும் எச்சரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஃபர்ஸ்ட்கிரை, பார்ம்ஈஸி, மெக்ஃபே போன்ற நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டின் டார்க் பேட்டர்ன் தடுப்பு வழிகாட்டுதல்களின்படி, பொய் அவசரம், மறைமுகக் கட்டணம் போன்ற 13 வகையான ஏமாற்று வடிவமைப்பு உத்திகளைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Edited by Siva
