ஒரு முழு ரயில் பெட்டியையும் ரிசர்வ் செய்த திருமண வீட்டார்.. ஆடல், பாடல் என கொண்டாட்டம்..
இந்திய திருமணங்கள் என்றாலே ஆடல், பாடல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்த கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
ஒரு குடும்பம் ஒட்டுமொத்த ரயில் பெட்டியையும் முன்பதிவு செய்து, ரயிலையே ஒரு 'நடமாடும் திருமண மண்டபமாக' மாற்றியுள்ளனர். இதுகுறித்த வீடியோவில், ரயில் பெட்டியின் பெயர் பலகையில் மாலை அணிவிப்பது முதல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக நடனமாடுவது வரை அனைத்தும் பதிவாகியுள்ளது.
மணப்பெண் கேக் வெட்டி கொண்டாட, உறவினர்கள் திருமண சடங்கிற்கான சீர் வரிசைகளுடன் உற்சாகமாக சூழ்ந்துள்ளனர். ஒரு டிக்கெட் பரிசோதகர் அந்த நெரிசலில் தனது பணியை செய்ய முயல்வதும், பின் சிரிப்புடன் அவர்களுடன் இணைவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் இருதரப்பு விவாதங்களை உருவாக்கியுள்ளது. "கூட்டு குடும்பமாக பயணிப்பது ஒரு தனி சுகம்" என்று சிலர் பாராட்டினாலும், "பொது இடங்களில் இவ்வளவு சத்தம் தேவையா?" என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில், இந்திய ரயில்வேயின் FTR அதாவது Full Tariff Rate முறைப்படி, ஒரு முழு பெட்டியையோ அல்லது ரயிலையோ தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு முன்பதிவு செய்வது சட்டப்பூர்வமான சேவையாகும்.
Edited by Siva