1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜனவரி 2016 (10:56 IST)

50 கோடி மதிப்புள்ள நிலத்தை 75 ஆயிரத்துக்கு பெற்ற ஹேமமாலினி: கொந்தளிக்கும் காங்கிரஸ், சிக்கலில் பாஜக

நடிகையும், பாரதிய ஜனதா எம்.பி-யுமான ஹேமமாலினிக்கு மும்பை புறநகர் பகுதியான அந்தேரியில் நாட்டிய பள்ளி ஆரம்பிக்க இடம் ஒதுக்கியதில் மராட்டிய மாநில அரசு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.


 
 
நடிகை ஹேமமாலினி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த அவர் உத்தர பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மாதத்திற்கு முன்பு மராட்டிய மாநில அரசு மும்பையின் அந்தேரி பகுதியில் நாட்டிய பள்ளி ஆரம்பிக்க ஹேமமாலினிக்கு 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்கியது.
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் படி சமூக ஆர்வலர் அனில் கல்கலி இந்த நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
 
தகவல அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் ஹேமமாலினிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.35 வீதம் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.75 ஆயிரம் தான் பெற்றுள்ளனர். சந்தை நிலவரப்படி சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.75 ஆயிரத்துக்கு ஒதுக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசு நிலத்தை இப்படி அதிகார வர்க்கங்கள் கூறு போட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பது, பொது மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒதுங்க இடமில்லாமல் தெருவோரங்களில், ரோட்டோரங்களில் நம் நாட்டில் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஹேமமாலினிக்கு கிடைத்த இந்த சிறப்பு ஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்குமா?.
 
மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மராட்டிய அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதில், புதிய கொள்கை வகுக்கப்படும் என்று இப்போதைய அரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால், பாஜக எம்.பி. ஹேமமாலினி நிலம் ஒதுக்கியதில் எந்தவொரு கொள்கையும் பின்பற்றப்படவில்லை. இது மராட்டிய அரசின் இரட்டை வேடத்தை உணர்த்துகிறது என காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான் கூறியுள்ளார்.