தந்தையின் இறப்புக்கு கூட வராத 3 மகள்கள்.. இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த கொடுமை.. மனிதம் மரத்துவிட்டதா?
தங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு தங்களை ஆளாக்கிய தந்தையின் இறுதி சடங்கில் நேரில் பங்கேற்காமல், வீடியோ கால் மூலமாக பார்த்த மகள்களின் இரக்கமற்ற செயல் அரியானாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த முன்னாள் துணி வியாபாரியான சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். தன் மூன்று மகள்களையும் நன்றாக படிக்க வைத்து, இருவரை ஆசிரியர்களாக்கி அழகுபார்த்தவர் குப்தா. ஆனால், நோய்வாய்ப்பட்டு முதியோர் இல்லத்தில் உயிருக்கு போராடியபோதும், அவர் இறந்த பிறகும் நேரில் வர மகள்களுக்கு நேரம் இருக்கவில்லை. மாறாக, நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் இருந்தபடி வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்தனர்.
இறுதிச்சடங்கின்போது ஒரு மகள், "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்" என்று கூறியது அனைவரையும் உரைய வைத்தது. நேபாளத்தில் இருக்கும் ஒரு மகள் ரூ.5,100 பணத்தை ஆன்லைனில் அனுப்பி முறைப்படி தகனம் செய்யுமாறு கோரினார். இறுதிச்சடங்கை முதியோர் இல்ல நிர்வாகமும் உள்ளூர் மக்களுமே முன்னின்று நடத்தினர்.
குடும்பத்தின் விருப்பப்படி, குப்தாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. தந்தையின் சாம்பலைக்கூட பெற வர முடியாது என கூறி, கங்கையில் கரைத்துவிடுமாறு மகள்கள் கூறிவிட்டனர். பெற்ற பிள்ளைகளின் இந்த அலட்சிய போக்கு மனிதநேயத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
