மீண்டும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி நோக்கி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்..
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகளை ஹரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.
பிப்ரவரி 2024 போராட்டத்தை போலவே எல்லையில் பலத்த தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் எல்லையிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களின் ஜனநாயக உரிமையை ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசுகள் பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் மானியம் பெற்ற சமையல் மற்றும் விவசாய பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்துவிடும் என்றும், இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கிசான் மக்பஞ்சாயத்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவின் பால் துறையானது கிட்டத்தட்ட 80 மில்லியன் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதாகவும், இந்த ஒப்பந்தம் கிராமப்புற பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்திய பிறகே எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Edited by Siva
