வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (07:47 IST)

அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழ்நாட்டில் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
2022 ஆம் ஆண்டுக்குள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இந்த திட்டத்தின் படி, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் வரை மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.
 
அந்தந்த மாநில அரசுகள் இந்த வீடுகள் கட்டுவதற்கான நிலங்களை வழங்கும். இந்த திட்டத்தின்படி, தங்கள் மாநிலங்களில் மலிவு விலை வீடுகள் கட்ட மாநில அரசுகள் மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
 
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சக செயலாளர் நந்திதா சாட்டர்ஜி தலைமையில், அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், மாநில அரசுகள் சமர்ப்பித்த அறிக்கைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நகர்ப்புற ஏழைகளுக்கு 2 லட்சத்து 28 ஆயிரத்து 204 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
இவற்றில், 2 லட்சத்து 17 ஆயிரத்து 747 வீடுகள், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கானவை ஆகும். மற்ற வீடுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய அரசு ரூ.1½ லட்சம் நிதி உதவி வழங்கும். இதன்மூலம், மொத்தம் ரூ.3 ஆயிரத்து 231 கோடி வழங்கும்.
 
மாநிலவாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை வருமாறு:-
 
தமிழ்நாட்டில் 2,932 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த வீடுகள் 5 நகரங்களில் கட்டப்படும்.
 
தெலங்கானா மாநிலத்தில் 10,290 வீடுகள் 10 நகரங்களில்  கட்டப்படும். ஆந்திர மாநிலத்தில்  1,93,147 வீடுகள்  37 நகரங்களில்கட்டப்படும்.
 
 குஜராத் மாநிலத்தில் 15,580 வீடுகள் 4 நகரங்களில் கட்டப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் 6,255 வீடுகள் 10 நகரங்களில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.