வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 11 ஜனவரி 2015 (11:30 IST)

2022 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா இந்தியா: பிரதமர் மோடி

வரும் 2022 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவை குடிசை இல்லா நாடாக  உருவாக்குவதே எங்கள் கனவு என்று டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. மேலும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதை கண்டித்தார். மேலும் டெல்லியில் ஓராண்டை வீணாக்கி விட்ட அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
 
பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டத்தின் 11 கோடி கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். மேலும் கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வருகிற பாரதீய ஜனதா கூட்டணி அரசு, டெல்லி மாநகரின் வளர்ச்சிக்கு உதவுகிற 17 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்றார்.
 
ஒட்டுமொத்த இந்தியாவிலும் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கனவாகும் என்றார். எங்கள் அரசு ஏழை ஏழை மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. வெறும் அறிவிப்புகளால் மட்டும் ஏழை மக்களை முன்னேற்றம் அடையச்செய்து விட முடியாது. 
 
அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட புதிய வகை அரசியலை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அது வளர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகும். எனவே டெல்லி மக்கள், வரக்கூடிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கச் செய்யுங்கள் என்று கூறினார்.