1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (18:26 IST)

2ஜி அலைக்கற்றை வழக்கு: மத்திய அமலாக்கத்துறை 19 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2ஜி அலைகற்றை வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி, இராசாத்தியம்மாள் உள்ளிட்ட 19 பேர் மீது மத்திய அமலாக்கத்துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரின் வாக்குமூலங்கள் மே 5 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்படவேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
ஏறத்தாழ 824 பக்கங்களில் உள்ள 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று குற்றம்சாற்றப்பட்டவர்கள் கோரியதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சய்னி இந்த வாக்குமூலங்களை பதிவு செய்யும் தினத்தை மே மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அப்பொது, நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ்குப்தா, கேள்விகளை படிக்க, காலஅவகாசம் தேவைப்படுவதால் வாக்குமூலங்கள் பதிவை மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறும், அதன்பிறகு கூடுதல் கால அவகாசம் கோரப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருந்தார். ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் இதே காரணத்தை தெரிவித்து கால அவகாசம் கோரினார்.
 
ஆனால் கேள்விகள் அடங்கிய கோப்புகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டன என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். கடந்த 2011 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி விசாரணையை துவங்கிய இந்த வழக்கின் விசாரணையில், சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட இரண்டு குற்ற அறிக்கைகளில் 3 தொலைதொடர்பு நிறுவனங்களின் பெயர்கள் உட்பட 17 பேரின் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டது.
 
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை 19 பேர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட 9 நிறுவனஙக்ள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 30 ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.