வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (10:04 IST)

மாணவர் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம்: பாஜக விளக்கம்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர்கள் ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் ஆகியோர் கூறியுள்ளனர்.


 
 
தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில்  ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை வைத்து காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது.
 
மாணவர் தற்கொலை செய்துகொண்ட இடத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் அரசியல் ஆதாயம் தேடவே சென்றுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த இழிவான அரசியலை காங்கிரஸ் கைவிட வேண்டும் என கூறிய அவர்கள், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என கூறப்படுவதை நிராகரித்தனர்.
 
மேலும் மத்திய மனித வளதுறையின் நெருக்கடியின் பேரிலேயே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அந்த அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
 
மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல் சம்பவத்தில் விதிப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
 
அவர்கள் முறையான பதில் அனுப்பாததால், குறிப்பிட்ட கால இடைவேளையில் 4 முறை நினைவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதான். பல்கலைக்கழகத்துக்கு எவ்வித நெருக்கடியும் அளிக்கவில்லை என மத்திய மனிதவளத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கோயல் கூறினார்.